மரண வீட்டில் வாள்முனையில் கொள்ளை!

அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 21 வயதாக நாகராசா நிதர்சன் என்பவர் உயிரிழந்திருந்தார்.

அளவெட்டியில் உள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு மரண சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றநிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி , வாள் என்பவற்றுடன் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர்
வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் இருந்த சங்கிலி , பெண்களின் தோடுகள் என்பவற்றை அபகரித்ததுடன் , ஒருவரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

கொள்ளையிட்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் போது , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் திறப்பை வாள் முனையில் பறித்து மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டு சென்றனர்.

குறித்த கொள்ளை கும்பல் தப்பி செல்லும் போது வீட்டில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பிய போதும் , அயலவர்கள் உயிரிழந்தவரின் இழப்பை தாங்க முடியாது கதறி அழுகிறார்கள் என நினைத்து உடனே உதவிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல்துறையினருக்கு அறிவிக்க ப்பட்டத்தை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts