மரணித்த உறவுகளை அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது!

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள், நாளை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி – அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராவது தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“மரணித்தவர்கள் மதிக்கப்படவேண்டும். இதனைத் தடுக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும். இதனை இந்த அரசிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்” என்றும் அவர் கூறினார்.

மாவீரர் நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் கடும்போக்குடைய சிங்கள அரசியல்வாதிகளும், இராணுவத்தினரும், பொலிஸாரும் தெரிவித்துவருகின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் இது நல்லாட்சி என்றால் தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றுகூடுவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் சுதந்திரம் உள்ளது.

தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகின்றது. எனவே, தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி – அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.

இதனை எவராவது தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும். மரணித்தவர்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களை நினைவுகூருவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும் என்றும் இந்த அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.

Related Posts