Ad Widget

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

2

வரணியில் நேற்று (27.11.2014) நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

விடுதலைப்புலிகளோ அல்லது வேறு போராளிகளோ இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகத் தெரியலாம். ஆனால், அவர்கள் எங்களின் இரத்த உறவுகள். எங்களுக்காகத் தங்கள் உயிர்களைக் கொடுத்த தியாக சீலர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்பதில் இராணுவம் மிகக்கவனமாக இருக்கிறது. நினைவு நடுகற்களை அழிப்பதன் மூலமோ, நினைவுதின நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிடமுடியாது என்பதை அரசாங்கமோ, இராணுவமோ புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.

நாங்கள் நடுகின்ற மரங்கள் வெறும் மரங்கள் அல்ல. மரங்களைத் தெய்வமாக வழிபட்ட மரபைக் கொண்டவர்கள் நாங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்து ஆலயங்களில் தல விருட்சங்கள் காணப்படுகின்றன. அதுமட்டும் அல்லாது, சங்க இலக்கியங்களில் தமிழர்கள் மரங்களை உறவினர்களாகப் போற்றியதாகப் பதிவுகள் உள்ளன. எனவே மரம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் உணர்வுபூர்வமாகக் கலந்துவிட்ட ஒன்று. எனவே அந்த மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் எமது உணர்வுகளுக்கு வடிகால் தேடுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக்கொள்ளமுடிகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன், ச.சுகிர்தன், சாவகச்சேரி பிரதேசசபைத் தலைவர் சி.துரைராசா, வலிவடக்கு பிரதேசசபைத் தலைவர் ச.சஜீவன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

மேலும் படங்களுக்கு…

Related Posts