யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது.
மாணவனது பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை பல்கலை மாணவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி உரையை நிகழ்த்திய அரசியல்வாதிகளுக்கு, மரணவீட்டில் வந்து அரசியல் நடத்த வேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராஜா உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஒலிவாங்கியை மாணவர்கள் பிடுங்கி எறிந்துள்ளனர்.
அத்துடன் குறித்த அஞ்சலி நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்து வெளியேற்றியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பூதவுடல் பாரதிபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.