இறுதிக் கிரியைக்கு தயாராக இருந்த சடலத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த 48 வயதுடைய கார்த்திகேசு தவராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனாவில் கடையொன்றில் சிப்பந்தியாக கடமையாற்றியுள்ளார். இவர் கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் உள்ள வேலை பார்த்த கடையில் தனது சம்பளத்தை கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதலாளியினால் தாக்கப்பட்டு இவர் கழிவு நீர் ஓடும் வாய்க்காலில் தள்ளப்பட்டு காயங்களக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், பொலிசாருக்கும் வாக்கு மூலம் அளித்து விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் வந்த இவர் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 16ஆம் திகதி இரவு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
எனினும் இவருடைய சடலம் பிரேத பரிசோதனை மரண விசாரனைக்கு உட்படுத்தப்படாமல் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்ட நிலையில், மரண கிரியைகளுக்கான நடவடிக்கைகளை உறவினர் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஊர்காவற்துறை பொலிசார் தலையிட்டு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீள ஒப்படைத்துள்ளதாக உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை செய்தே சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.