மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி

தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ம் திகதி ஊருக்கு வந்த கிருபாகரன், தனது தம்பி விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் ஆரணிக்குச் சென்றார்.

அடையாளம் என்ற கிராமத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில் இருவரும் படு காயமடைந்தனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிருபாகரனை மட்டும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், கிருபாகரன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும் பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கிருபாகரனின் இதயத்தை சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தீஸ்கர் மாநில இளைஞருக்கு பொருத்த முடிவானது.

அதன்படி, கிருபாகரனின் இதயம் அகற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் விஐடி பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு இதயத்தை எடுத்துச் சென்றனர்.

கிருபாகரனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. ஒரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Posts