மரங்களின் நிழலில் ஏதிலிகளாகப் பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருமே பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் மரங்களின் மீது வாழ்ந்தவர்கள்தான். மரங்கள்தான் மனிதனின் ஆதிவீடுகள். அந்தவகையில், நன்றி மறக்காதவர்களாக மரங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய கட்டாயக் கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்தைக் கடைப்பிடிக்கும்விதமாக முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (03.11.2014) மரம்நாட்டும் வைபவம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் த.யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னால் மரங்கள் தோன்றிவிட்டன. மரங்கள், மனிதர்கள் இல்லாமல் என்றும் நிலைத்திருக்கக்கூடியவை. ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்களால் சில நாட்கள்கூட உயிர் வாழமுடியாது. மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல் உலகில் வாழுகின்ற அத்தனை உயிரிகளுக்குமே உயிர் ஆதாரம் மரங்கள்தான். ஆனால், நாம் மரங்களைக் கண்மூடித்தனமாக அழித்துவருகிறோம்.
மரங்களில்தான் எமது ஆதிமூதாதைகள் குடியேறியிருந்தார்கள். பரிணாமத்தில் மனிதர்களும் குரங்குகளும் ஒரு பொது மூதாதையில் இருந்தே தோன்றியுள்ளன. இதற்குச் சாட்சியாக இப்போதும் எமது முள்ளந்தண்டின் கடைசியில் வால் எலும்பு சிறிதாகக் காணப்படுகிறது. இதைத்தான் குயிலலகு என்கிறார்கள். மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுகின்றவர்கள் ஊஞ்சல் உயரே செல்லும் தருணங்களில் முள்ளந்தண்டின் கடைசியில் ஒருவித கூச்ச உணர்வை அல்லது துடிப்பை அனுபவரீதியாக உணர்ந்திருக்க முடியும்.
குரங்குகள் தவறி விழுந்துவிடாமல் இருப்பதற்காக வாலால் மரக்கிளைகளைப் பற்றிப்பிடிக்கின்றன. அதுபோன்றுதான் ஊஞ்சலில் உயரே செல்லும்போது, எங்கே தவறி விழுந்துவிடப்போகின்றோமோ என்ற பயத்தின் காரணமாக எமது வால் எலும்பு, தான் ஒரு வால் என்ற பழைய நினைப்பில் கிளைகளை எட்டிப்பிடிக்க எத்தனிக்கிறது. இந்த எத்தனம்தான் முள்ளந்தண்டில் ஏற்படும் குறுகுறுப்புக்குக் காரணம்.
பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் நாம் மரத்தில்தான் வாழ்ந்தோம் என்பதை உருச்சிறுத்துத் தொழிலற்றுப் போனதுக்குப் பிறகும் வால் எலும்பு இன்றும் நினைவில் வைத்துக்கொண்டிருகிறது. ஆனால், நாம்தான் நன்றி மறந்தவர்களாக எமது ஆதிவீடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஆளுக்கொரு மரமாவது நட்டு வளர்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின்போது நூறு மாணவர்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.