மயிலிட்டி கிராம மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் சென்று மீளக்குடியமரப் போவதாக அறிவிப்பு

வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு மீளக்குடியமரப் போவதாக இடம்பெயர்ந்த மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களை நேற்று நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியிடமே மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன் அதற்கு தமது பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவியையும் கோரியுள்ளனர்.

மீன்பிடி கரையோரக் கிராமமான மயிலிட்டியை கடந்த 22 வருடங்களுக்கு மேலாக படைத்தரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.

இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது வடமராட்சிப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

எனினும் உள்ளுர் மக்களுக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குமான முறுகல் நிலை முற்றியுள்ள நிலையில் தம்மை மீளக்குடியமர அனுமதிக்காவிட்டாலும் மீன்பிடிக்கு தொழிலுக்கு ஏதுவாக கடற்கரைப்பகுதிக்கு செல்லவேனும் அனுமதிக்குமாறு கோரிவருகினறனர்.

கடந்த வாரமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் மகஜரொன்றை அவர்கள் கையளித்துள்ளனர்.

இந்நிலையிலேயே வெள்ளைக்கொடியுடன் தமது சொந்த இடத்திற்கு திரும்பப் போவதாக இம்மக்கள் அறிவித்துள்ளனர்.

Related Posts