மயிலிட்டியில் சில பகுதிகளை விடுவிக்க இணக்கம்!

மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Major-General-Mahesh-Senanayake-army

பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களும், முகாம் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை வியாபாரி மூலையில் தற்காலிகமாக இயங்கி வரும் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த-17 ஆம் திகதி இடம்பெற்ற மீனவர்களுக்கான விசேட கூட்டத்தில் மயிலிட்டிப் பிரதேசத்தை உடனடியாக விடுவிக்காவிடில் பாரிய மக்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் எதிரொலியாகவே பலாலி இராணுவத் தளபதி மயிலிட்டி மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதன்போது விரைவில் காங்கேசன்துறை முதல் தையிட்டிச் சந்தி வரை முதற்கட்டமாகவும், ஜே-251 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மயிலிட்டிச் சந்தி, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றை இரண்டாவது கட்டமாகவும் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, மயிலிட்டிப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளான மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் அவற்றைப் படிப்படியாக அகற்றிய பின்னர் இந்த வருட இறுதிக்குள் விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.

Related Posts