மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு!

யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

அந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாகவே நிராகரித்துள்ளார். பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதைக்கு நெருக்கமாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இருப்பதாகவும், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டங்கள் இருப்பதால் அதற்கு துறைமுகப் பகுதி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேளையில் குறுக்கிட்ட சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கடலேரியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

விமானங்கள், தரையிறங்குவதற்கும், மேலெழுவதற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார். இதையடுத்து, காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

Related Posts