மயிரிழையில் தப்பியது மகிந்த அரசு : சம்பந்தன் எம்.பி

யுத்த வெற்றியின் மூலம் நாட்டின் பாதுகாவலர் தானே எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் மக்களை ஏமாற்றும் மஹிந்த அரசின் பொய்ப் பிரசாரங்கள் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தவிடுபொடியாகியுள்ளது.

sambanthan-mahintha

இந்தத் தேர்தலில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசு, மயிரிழையில் தனது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.”

நடந்து முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

“”ஊவா மாகாணசபைத் தேர்தலில் மஹிந்த அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைக் புகட்டியுள்ளனர். இதனால் அரசின் வாக்குவங்கி சரிந்துள்ளது. 6 ஆசனங்களை இந்த அரசு இழந்துள்ளது.

மக்கள் தீர்ப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்தத் தேர்தல் சிறந்த உதாரணமாகும். எனவே, மஹிந்த அரசு இனியும் மக்களை ஏமாற்ற முடியாது”

“உண்மையில், ஊவா மாகாண சபைத் தேர்தல் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெறவில்லை. மாகாணசபை கலைக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடை பெறும் திகதிவரை அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது.

மக்களுக்குப் பொருட்கள், போக்குவரத்து வசதிகள், தொழில்வாய்ப்புகள் மற்றும் விசேட சலுகைகளை வழங்கி தேர்தல் சட்டவிதிமுறைகளை இந்த அரசு அப்பட்டமாக மீறியது. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியினர் மீது தொடர் வன்முறைகளையும் இந்த அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது.

எனவே, ஊவா தேர்தலை ஜனநாயகத் தேர்தல் என ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல்கள் ஆணையாளருக்குரிய அதிகாரங்களைக்கூட இந்த அரசு பறித்துவைத்திருந்தது.

இவ்வாறிருந்தபோதிலும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் மிகவும் கூடுதலான ஆதரவை பெற்றுள்ளன. கடந்த முறையைவிட இம்முறை தேர்தலில் எதிர்க்கட்சிகள் அதிகவாக்குகளைப் பெற்றுள்ளன.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளே அரசை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேர்தல் சட்டவிதி முறைகளை மீறி அரசு வழங்கிய இலஞ்சமே இதற்குக் காரணமாகும்.

எனினும், முஸ்லிம் மக்கள் மஹிந்த அரசையும், தனித்து நின்று கூட்டுக் கட்சியாக வாக்குக் கேட்ட அரசின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றையும் ஆதரிக்கவில்லை. அவர்கள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

ஊவா முஸ்லிம் மக்கள் விழிப்படைந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

இந்தத் தேர்தலில் மஹிந்த அரசு மயிரிழையில் வென்றுள்ளது. ஆனால், உண்மையான, நேர்மையான தேர்தல் நடைபெற்றிருந்தால் அரசின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும்” – என்றார்.

Related Posts