மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 அளவில் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் யோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கவுள்ளனர்.

மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் திருச் செபமாலையுடன் நவ நாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதேவேளை மடு திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அவர்களுக்கான போக்குவரத்து,குடி நீர் ,சுகாதாரம்,மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.

இந்த நிலையில் மடு திருவிழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்தரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மடு திருத்தலத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்றது.

இதேவேளை, மடு திருவிழாவிற்காக அரசாங்கம் சுமார் ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன், இதனை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் கையளித்தார்.

Related Posts