மன்னார் பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குவதற்கு கல்வி அதிகாரிகளே காரணம்!!

போருக்கு பின்னரும் மன்னார் பிரதேச பாடசாலைகள் புத்தளத்தில் தற்போதும் இயங்கி வருகின்றமைக்கு கல்வி உயர் அதிகாரிகளின் அசமந்தமே காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாக சாடினார்.

மன்னார் பிரதேச பாடசாலைகள் தற்போதும் புத்தளத்தில் இயங்குவதால் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்துக்கான பல பாடசாலைகள் வடமேல் மாகனத்துக்குட்பட்ட புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த விடயம் வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்திலேயே பல தடவைகள் பேசப்பட்டன. குறிப்பாக மூன்று வருடங்களின் முன்னர் குறித்த விடயம் சபையில் விவாதிக்கப்பட்டது.

மன்னார் பாடசாலைகள் புத்தளத்தில் இயங்கி வருகின்றபோதும் அங்கு கடமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண சபையின் ஊடாக ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை சபையில் சுட்டிக்காட்டப்பட்டு அவ்வாறு பிற மாகாணத்தில் இயங்கும் பாடசாலைகளுக்கும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எமது சபையின் ஊடாக சம்பளம் வழங்க முடியாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலைகள் வடக்கு மாகாண சபையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது வடமேல் மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என கோரப்பட்டது.

மேலதிக நடவடிக்கைகள் தற்போதுவரை எடுக்கப்படவில்லையாயின் அதற்கு உயர் அதிகாரிகளே காரணமாகும். மாகாண சபையின் தீர்மானத்தை அவர்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. மாகாண சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தொடர் நடவடிக்கையை அதிகாரிகள் செய்திருந்தால் இந்த மூன்று ஆண்டில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.

எனவே வடக்கு மாகாணத்துக்கு தற்போது வந்துள்ள ஆளுநர் சுரேன் ராகவன் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் மட்டுமல்லாது மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளின் தொடர் நடவடிக்கை போன்றவற்றிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

Related Posts