மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலையிலுள்ள ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சம்பந்தமாக ஊடகம் தவறான செய்திகளை பிரசுரிப்பதால் பொதுமக்கள் பலர் சஞ்சலங்களுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் கவலை தெரிவிக்கின்றது.
கடந்த வாரம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 23 வருட ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த தினம் ஆயர் அவர்கள் உயிர் துறந்து விட்டார் என்ற செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் உள்ளோரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் நாளாந்தம் அதிகமானோர் மன்னார் ஆயரின் நிலமையைப் பற்றி மன்னார் ஆயர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் தெரிவிக்கின்றது.
தவறான செய்திகளை பிரசுரித்து பொதுமக்களை சஞ்சலத்துக்கும் மனத்துயரத்துக்கும் உள்ளாக்க வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்ல வட்டாரச் செய்திகளை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஊடாக அதன் நிர்வாகத்திடம் பெறப்படும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் பிரசுரிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.