மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.
மன்னார் பணங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் (வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
கணவன்; கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று வெள்ளிக்கிழமை(14) காலை, மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றார்.
விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த போது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் அவரை கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், எனது கணவரை கைது செய்துள்ளதாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என தனது கணவரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
தனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார்.பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே தனது கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேலும் தெரிவித்தார்.