மன்னாரில் மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் கரையொதுங்கியது!

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கடலில் மூழ்கி மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தலைமன்னார் பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-

தலைமன்னார் பொலிஸ் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் காணவில்லையென அவர்களின் உறவினர்கள் சகல இடங்களிலும் தேடினர்.

பின்னர் நேற்றிரவு 7 மணியளவில் அவரது சடலம் தலைமன்னார் தென் கடல் பகுதியான பருத்திப்பண்ணை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளின் தாயான பர்வோன் ஞானமாணிக்கம் (வயது 44) என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தப் பெண் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருகிறது.

சடலம் தலைமன்னார் பொலிஸாரால் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை மரண விசாரணையை மேற்கொண்டார். பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts