மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் இந்த அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Posts