‘வாழையிலையில் சுற்றிக்கொண்டுவந்த சாப்பாட்டைத்தான், அன்று நான் சாப்பிட்டேன். அதேபோலத்தான் இன்றும் சாப்பிடுகின்றேன்’ என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘மன்னன் சாப்பிட்டது போல நான் சாப்பிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கலின் பெறுபேறாகவே தான், ஜனாதிபதியானார் எனக் கூறிய ஜனாதிபதி, அதேபோல அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச சேவையாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை, வழங்குவதற்குக் குழுவொன்றை நியமிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 33ஆவது ஆண்டுநிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘மன்னர் மன்னனாக சாப்பிடவேண்டும் என்றே தேரரொருவர் அன்று கூறியிருந்தார். மன்னர், கிராம சேவகரைப் போல சாப்பிடக்கூடாதென்றும் தேரர் கூறியிருந்தார். எனினும், அன்று சாப்பிட்டதைப் போலவே நான், இன்று சாப்பிடுகின்றேன்’ என்றார்.
தன்னுடைய கடந்தகாலத்தை ஞாபகப்படுத்திய ஜனாதிபதி, நிர்வாக சேவையில் பயணத்தை ஆரம்பித்து, அண்மிக்கக்கூடிய உயர்ந்த இடத்துக்கு வருகைதந்தாக கூறினார்.
‘நான், ஒருநாள் கடமைக்கு வருகைதந்த போது, கிராம சேவகர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று கூறினர். எனினும், நான் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்று முடித்துவிட்டேன்’ என்றார்.