கௌரவ மனோ கணேசன்
சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர்
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு.
வடக்கு ஊடகவியலாளர்களது தெற்கு பயணம்
பனையோலையும் எழுத்தாணியும் சேர்ந்ததோர் நட்புறவு பயணம் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் சுமார் 125 தெற்கு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து 54 ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்திலிருந்து அனைத்து நிகழ்ச்சி நிரல்களும் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சே திட்டமிட்டிருந்ததுடன் நிதி ஏற்பாட்டையும் அதுவே செய்திருந்தது. வடக்கு ஊடகவியலாளர்களை ஒருங்கிணைப்பதனை யாழ்.ஊடக அமையமும் தெற்கினில் ஒருங்கிணைக்க ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவும் முன்னின்றிருந்தன.
அவ்வகையில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சருடனான சந்திப்பு பற்றி ஏதும் தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை. அத்துடன் அவர்களது நெருக்கமான நிகழ்ச்சி நிரலால் தங்களை தனிப்பட்ட வகையிலும் சந்திக்க எமக்கு நேரம் குறித்த இரு நாட்களில் கிட்டியிருக்கவில்லை.
ஜனநாயக செயற்பாட்டாளர் மனோ கணேசன் தொடர்பில் எமக்கு என்றுமே பெருமதிப்பு உண்டு.பெரும்பாலும் தங்களுடன் இணைந்து போராடிய நிகழ்வுகள் எமது மனதில் மாற்றமின்றி நினைவிலுள்ளது. அதனை மதிக்கின்றோம். இவற்றிற்கப்பால் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவாக யாழில் பெரும் சிரமங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட அந்த நினைவு தூபியில் தங்களது பங்களிப்பு வெளித் தெரியாதவொன்றாகவே இருந்து வருகின்ற போதும் நாம் அனைத்தையும் அறிந்தே இருக்கின்றோம்.
ஜனாதிபதி, பிரதமர், ஊடக அமைச்சர் சந்திப்பில் என்ன பேசப்பட்டது, என்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட மகஜரில் என்ன இருந்ததென்பதை தாங்கள் செய்திகள் வழியாகவேனும் அறிந்திருக்காமை கவலையை தருகின்றது. தங்களிற்கும் மற்றவர்களிற்குமாக பங்கெடுத்த ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தலுடன் பேசப்பட்ட விபரங்கள்,கையளிக்கப்பட்ட மகஜர்கள் இணைக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களது நினைவுகள், கனவுகளது சாட்சியங்களாக எஞ்சி வாழும் நாம் தெளிவாகவே இருக்கின்றோம். சலுகைகளிற்காகவோ பதவிகளிற்காகவோ நாம் சோரம்போனவர்களாக இருக்கப்போவதில்லை. அல்லது எமதோ அல்லது பிள்ளைகளதோ பிறந்த நாளிற்கு அழைப்பு விடுக்கவோ சந்திப்பில் நாம் பங்கெடுக்கவில்லை என்பதும் தங்களிற்கு தெரியும்.
வடக்கு ஊடகவியலாளர்களுடன் குழு புகைப்படம் பிடிக்க கூட ஜனாதிபதி ஊடகப்பிரிவே அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினை பிரசுரித்ததும் அவ்வலுவலகமே. அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றில் நடைபெற்ற சந்திப்பில் பங்கெடுக்க சென்ற எவரும் புகைப்படகருவிகளையோ தொலைபேசிகளையோ கொண்டு செல்ல அனுமதிக்கப்படாதென்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச ஊடக அமைப்புகளது கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரிக்கையை நாம் உரத்து வலியுறுத்தியமை தொடர்பில் தாங்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நீங்கள் முடிந்தால் கேட்டறிந்து கொள்ளுங்கள். எமது கோரிக்கைகளிற்கான பதிலை அவர்களிடம் கேட்டறிந்து அறிவித்தால் இன்னமும் மகிழ்ச்சி.
நிற்க தாங்கள் சார்ந்த அமைச்சான சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அழைப்பு விடுக்குமிடத்து நல்லிணகத்தை தோற்றுவிக்க வடக்கு ஊடகவியலாளர்கள் தங்களை சந்திக்கவும் விருந்தோம்பலை தரிசிக்கவும் கொழும்பிற்கு மீண்டும் வருகை தர தயாராக உள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
தங்களது அன்புடனான அழைப்பினை எதிர்பார்த்து காத்துமிருக்கின்றோம்.
இ.தயாபரன்
இணைப்பாளர்,யாழ்.ஊடக அமையம்