மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நாவற்குழிப் பகுதியில் 9 மாதக் கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்த கவணனுக்கு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் மரணதண்டனையினை விதித்து தீர்ப்பழித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாவற்குழிப் பகுதியில் இருந்து சுரேஷ் சுஜா என்ற 9 மாத கற்பிணி உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கொலையினையடுத்து அவருடைய கணவரான ரவீந்திரன் சுரேஷ் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடாத்திய விசாரணையில், தனது மனைவியின் சகோதரியை மறுதிருமணம் செய்து கொள்ள தான் விரும்பியதாகவும் அதற்கு தனது மனைவி தடையாக இருந்த காரணத்தினால் அவரை கழுத்து நெரித்துக் கொலை செய்தாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வழக்கினை சாவகச்சேரிப் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் இவ்வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன்படி இன்று மேற்படி வழக்கு தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த நபரை மன்று குற்றவாளியாக இனங்கண்டு அவரை தூக்கில் இடுமாறும் தீர்ப்பழிக்கப்பட்டது.
எனினும் குறித்த நபருடைய குடும்ப நிலையினைக் கருத்தில் கொண்டு மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாமெனவும் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வேன் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.