கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் குறித்த போராடடக்களத்துக்கு விஜயம் செய்தனர்.
இதனை தொடர்ந்து மக்களிடம் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த மக்களின் அடிப்படை வாழ்விட உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் தம்மால் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக குழந்தைகள் முதியவர்கள் உட்பட முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு எனப் பல பகுதிகளிலும் மக்கள் ஆதரவு போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.