எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
யாழ்ப்பாணத்தில் இருந்து புளியம்பொக்கணைக்கு நாவற்குழி – கேரதீவு வீதியால் நான் இன்று வந்தபோது, வீதியோரங்களில் நெல் மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பல வயல்களில் நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவற்றைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அறுவடை விழாவிலும் நாம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இந்த மகிழ்ச்சியின் பின்னால் ஏராளமான வலிகள் இருக்கின்றன. அறுவடை செய்த நெல்லைக் காய வைப்பதற்கு எங்களுடைய விவசாயிகளிடம் உலர்த்தும் தரைகள் இல்லை. அறுவடை செய்த நெல்லுக்கு உரிய சந்தை விலை இல்லை. பயிர்ச்செய்கைக்காகப் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை. இப்படி ஏராளமான பிரச்சினைகள் எங்களுடைய விவசாயிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழப்பதில்லை. ஒவ்வொரு தடவையும் பயிர் விதைகளோடு நம்பிக்கை விதைகளையும் சேர்த்து விதைத்தே மண்ணை உணவாக்கி ஊரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு, நம்பிக்கையை இழக்காமல் இருப்பதற்குத்தான் நெல் அறுவடையை ஒரு விழாவாக இங்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விழாக்கள் மனதில் இருந்து கவலையை மறக்கச்செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சி மனதில் உற்சாகத்தைப் பற்ற வைக்கும். உற்சாகம் மனதில் நம்பிக்கையை விதைக்கும். அந்த நம்பிக்கைதான் எம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும். அந்தப்பாதையில் எங்களுடைய விவசாயிகளோடு விவசாய அமைச்சு எப்போதும் துணையாக வரும் என்று தெரிவித்துள்ளார்.