மனநலம் அவசியமானதா? -வைத்திய கலாநிதி  சத்தியமூர்த்தி

போலித்தனத்தை/ போலி வைத்தியத்தை புறந்தள்ளி உயிரை பாதுகாத்தல் மற்றும் உடல்நலத்தை பேணுதல்.
அண்மை காலமாக “தெய்வ வைத்தியராக” தன்னை தானே புகழ்ந்து பாடும் ஒருவர் நோயாளிகளை ஏமாற்றுகின்றமை உண்மையில் ஒரு வியப்பான செயல்!!! நம் நாட்டில் ஆங்கில மற்றும் சுதேச மருத்துவம் (சித்த, ஆயுள்வேத, யுணானி) அங்கிகாரம் பெற்ற சுகாதார சேவைகள் ஆகும்.துரதிருஷ்டவசமாக சில “போலி மருத்துவர்கள் அல்லது அதனோடு இணைந்த சேவையாளர்கள்”( அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கற்கையை மேற்கொள்ளாத, பட்டத்தை பெற்றிராத, போதிய அறிவை கொண்டிராத, ஏதோ வகையில் சில விடயங்களை தெரிந்த) இந்த நாட்டில் பல்வேறு வடிவங்களில் மக்களை ஏமாற்றுகின்றமை துரதிருஷ்டவசமான செயல்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சிலரில் ஒருவர் அண்மைக் காலங்களில் பிழையான கருத்துக்களை முகநூல் பதிவுகளாக செய்துவருகிறார். இதனை சிலர் பின்பற்றுகின்றமை போலி வைத்தியத்தை ஊக்குவித்ததாக அமைவதுடன் தமக்கு தீங்கு ஏற்படுவதை பின்பு விளங்கிக் கொள்வார்கள்.ஒருவருக்கு நோய் நிலைகள் ஏற்படும் போது தத்தமது வசதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் வைத்தியரை மற்றும் வைத்திய சேவையின் வகையினை நாடுதல் அவரது அடிப்படை உரிமை ஆகும்.
ஆனால் வைத்திய சேவையின் தரம் மற்றும் உண்மை தன்மை பற்றி அறிந்து, ஆராய்ந்த பின்னர் ஒரு சேவையை தெரிவு செய்து பெற்றுக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட நபரின் பொறுப்பு.ஏனெனில் வண்ணப் பூக்கள் வண்டுகளை கவர்ந்து இழுப்பது போன்று இந்த போலி மருத்துவமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்படுகிறது. “விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்” என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்லுவது உண்மையே.
அருகில் சென்றவர்கள் உண்மையில் வருத்தம் குணமடைய முன்னர் நோய் நிலையில் இருந்து விடுபட்டதாக ஏமாற்றப்படுகின்றமை தெளிவாக தெரிகிறது. நோய் நிலையில் இருப்பவருக்கு “சுகம் அடைந்து விட்டீர்கள்” என கேட்கும்போது இன்பமாக இருக்கும். விஞ்ஞான பூர்வமான கருத்துகளை புறந்தள்ளி தற்காலிக நற்செய்தியாக ஏற்றுக் கொள்ளுகின்றமை அறிவுபூர்வமற்ற செயலாகும். இவ்வாறானவர்களிடம் செல்பவர்கள் தங்களின் எதிர்காலத்தை சிக்கலுக்கு உள்ளாக்கி கொள்கின்றனர். இவர்கள் பின்னாளில் “பிழையான முறையினை பின்பற்றி விட்டோம்” என வருந்தும் நிலை ஏற்படும். அப்போது நிரந்தர பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்பட்டுவிடும். எமது பகுதிகளில் சில உயிரிழப்புகளுக்கு இது காரணமாக இருந்திருக்கிறது.
ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?
சமூகத்தில் சிலருக்கு பல்வேறு மனநிலை வேறுபாடுகள், உளக் கோளாறுகள், மனநோய்கள் காணப்படுகிறது. அவ்வாறானவர்கள் சமூகத்தில் ஏதோ ஒரு சமநிலையில் சமூகத்துடன் இணைந்து வாழப் பழகிக் கொள்கின்றார்கள்.
அவர்களின் தொல்லை அதிகரிக்கும் போது உளவியல் வைத்தியத்தை வழங்க வேண்டி ஏற்படுகிறது அல்லது விபரீதமான செயலில் சிக்கி தண்டனை பெறும் நிலை ஏற்படுகிறது. அச்சமயம் நீதிமன்ற மற்றும் காவல்துறையினரால் மனநல மற்றும் சட்ட வைத்திய சேவைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
உண்மையில் மன கோளாறு ஒருவருக்கு ஏற்படும் போது ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்யப்படல் வேண்டும்.
இந்த நாட்டில் அதிகரித்த உள நெருக்கடி நிலைக்கு ஏற்ற வகையில் சிகிச்சை வழங்கக் கூடிய போதிய சேவையாளர்கள் மற்றும் வசதிகள் இல்லை. இருப்பினும் வைத்திய நிலையங்களுக்கு சென்றடைந்தது உண்மை நிலையை சரியான முறையில் எடுத்துக் கூறினால் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த பாதிக்கப்பட்ட மனநிலை க்கான காரணம் என்ன?
உடல் உறுப்பான சதையி (Pancreas) சில பதார்த்த சுரப்புகளில் மாற்றம் அல்லது குறைவு ஏற்படும்போது சலரோகம் ஏற்படுகிறது. பெரும்பாலானவர்கள் சிகிச்சையினை கிரமமாக பெறுகின்றனர்.அவ்வாறே மூளையின் சில இரசாயன சுரப்புகளில் மாற்றம் ஏற்படும்போது மனநோய் ஏற்படுகிறது. சுகதேகி ஒருவரிடம் மூளையின் சாதாரண சுரப்புகளில் அவரின் எண்ணம், சிந்தனை, செயலில் உண்மைத் தன்மை காணப்படும். ஆனால் சுரப்பில் அசாதாரண நிலைகள் ஏற்படும் போது அவர்களின் எண்ணம் விபரீதமாக இருக்கும், சிந்தனை குரூரமானதாக இருக்கும், செயல் வினோதமாக இருக்கும். குறிப்பிட்ட நபருக்கு தான் செய்யும் அனைத்தும் நூறு வீதம் சரியானதாக தோன்றும். (No insight). ஏனெனில் சமநிலையற்ற இரசாயனப் பதார்த்த அளவு அவருக்கு அந்த நிலையை ஏற்படுத்தும். (பிழையான வகையில் தூண்டலைப் பெறுகின்றார்). ஆகவே அவரது நடத்தையில், நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றம் காணப்படலாம்.
இவ்வாறானவர்களுக்கு நாம் அல்லது உறவினர்கள் என்ன செய்ய வேண்டும்?
எமது சமூகத்தில் மனவள பாதிப்புகளை வெளியில் கூற அல்லது சிகிச்சை பெற முன்வருவதில்லை. தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு இருப்பதை மறைக்க விரும்புவார்கள். ஆரம்பத்தில் சிகிச்சை பெறாதவர் பின்னாளில் ஏதோ ஒரு சமநிலையில் வாழப் பழகிக் கொள்வார். அவரைச் சூழ்ந்து இருப்பவர்கள் பிறழ்வுகளை ஏற்றுக் கொண்டு அவ்வாறனவருக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வார்கள். ஆகவே தயக்கமின்றி மனநல வைத்திய சேவைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். ஏனெனில் மருந்து சிகிச்சை இன்றி அவர்களின் எண்ணம் மாற்றமடையாது. அவர்களிடம் இதனை எடுத்துக் கூறினால் சச்சரவு ஏற்படும்.
இவ்வாறானவர்களின் உலகம் எப்படி இருக்கும்?
-தாம் செய்யும் அனைத்தும் சரியென தோன்றும்.
-விசேட சக்தி இருப்பதாக உணர்வார்கள்.
– கடவுளின் வழிகாட்டல் இருப்பதாக எண்ணுவார்கள்.
-சிலவிடயங்களில் அதிக பயம் கொள்வார்கள். ஆகவே அவ் விடயங்களை தவிர்த்துக் கொள்வார்கள்
– இவ்வாறானவர்களில் சிலர் தம்முடன் யாரோ கதைப்பதாக உணர்வார்கள்.
– தீங்கு நடக்கப் போகும் என பயம் கொள்வார்கள்.
– அன்றாட கடமை மற்றும் செயற்பாடுகளில் மாற்றத்தினை அவதானிக்கலாம்.
– தான் ஒருவனே அறிவாளியாகவும் ஏனையவர்கள் முட்டாள்கள் போன்ற எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
– மிக நுட்பமான முறையில் தங்கள் வாதத்தை முன் வைப்பார்கள்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் பாதிப்பில் இருக்கும் அனைவரிடமும் இருக்க வாய்ப்புண்டா?
ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அளவுகளில் காணப்படலாம். ஒருசில செயற்பாடுகள் பாத்திரமும் காணப்படலாம்.
இவ்வாறான நபர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
சிகிச்சையினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். “எனக்கு தெரிந்த நபர் இவ்வாறான நிலையில் இருந்து பலருக்கு தொல்லைகள் ஏற்படுத்தியபோது உளவள சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு முதல் சிகிச்சைக்கான மருந்தை சிரமத்தின் மத்தியில் வழங்கினார்கள். பின்பு அவருடைய மனநிலையில் சாதாரண தன்மை ஏற்பட அவர் தொடர்ச்சியாக கிராமமான சிகிச்சையினை பெற்று இப்போது சந்தோஷமாக சாதாரண மனிதராக இருக்கின்றார்.
இவ்வாறானவர்களின் ஏனைய அறிவு ஆற்றல்கள் எப்படி இருக்கும்?
இவர்களில் பலர் பல்வேறு விசேட திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்களை ஆரம்பத்திலேயே இனம்கண்டு உளவியல் சிகிச்சையினை பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் சிகிச்சை பெற்று சாதாரண மனநிலையில் இருப்பார்களாயின் ஏனையவர்களுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பவர்கள். தொடர் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அவசியம்.
ஆரம்பத்தில் சிகிச்சை பெற வேண்டும் என அவர்களிடம் நேரடியாக கூறி தெளிவாக்க்க முடியுமா?
பெரும்பாலானவர்கள் முற்றிலும் எதிர்ப்பார்கள். தீங்கு செய்பவர் என சண்டைக்கு வருவார்கள். கடும் கோபம் கொள்வார்கள். ஆகவே உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களிடம் இதனை கூறமாட்டார்கள். மனநல சிகிச்சை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய சேவை. வாழ்வின் எந்நிலையிலும் யாருக்கும் ஏற்படலாம். வாழ்வில் ஒருவருக்கு அதிகரித்த நெருக்கடி ஏற்படும் போது விரைவில் ஏற்பட்டுவிடுகிறது. போதிய ஆலோசனையுடன் சிலர் சுகம் பெறுவார்கள். சிலருக்கு மருந்து சிகிச்சைகள் தேவைப்படும்.
இவ்வாறானவர்களின் சமூக வலைத்தள செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியுமா?
சரியான முறையில் அவதானித்தால் வேடிக்கை வினோத கோமாளித்தனத்தை விளங்கிக் கொள்ள முடியும். சிலசமயங்களில் இதனை சரியான முறையில் அவதானிப்பவர்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக மாத்திரம் இருக்கும். இந்த நிலையை விளங்கிக் கொள்ளாவிட்டால் பிழையான வழியை நாமும் சென்று விடுவோம்.
மக்கள் இவரை நாடிச் செல்ல வேறு என்ன காரணங்கள் இருக்கலாம்?
இவரோடு இணைந்து இன்னும் சிலர் கூட்டு தொழில் முயற்சியாக இதனை செய்கின்றனர். (கூட்டுக் களவு – Organised Crime)
இவ்வாறானவர்கள் வேறு சேவை நிலையங்களில் காணப்படுகிறனரா?
ஆம். பல்வேறு சேவை நிறுவனங்களில் வெவ்வேறு சமநிலையில் காணப்படுகின்றனர். சில சமயங்களில் முக்கிய பொறுப்பில் இருந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
ஊடகங்களின் பங்கு என்ன?
பொதுமக்கள் சரியான திசையில் செல்ல ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.சில ஊடகங்கள் இந்த உண்மை தன்மை தெரியாமல் அபூர்வ மனிதர்களின் ஆக்கப்பூர்வமான கருத்தாக தவறுதலாக எடுத்துச் செல்கின்றன. உண்மை வெளிவரும்போது மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்போது ஏற்பட்ட பிழையான கருத்துக்களை மீளப் பெற சந்தர்ப்பம் இல்லை.
உளவியல் தாக்கம் உள்ளவர்கள் பற்றி கதைக்கும் போது எவற்றை தவிர்க்க வேண்டும்?
சமூகத்தில் இழிவான சொற்கள் ( விசர், பைத்தியம், சைகோ, மென்டல் ) பிரயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கையில் யாருக்கும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நெருக்கடி ஏற்படும் போது இந்த நிலை ஏற்படலாம். ஆகவே யாரும் சவால் விடுதல் பொருத்தமற்றது. ஒவ்வொருவரும் தனக்கும் உள வருத்தம் வரலாம் என தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரண நபர் ஒருவர் உளநல குறைபாடுகள் மற்றும் நோய்கள் பற்றி எவ்வாறு அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்?

மனநோய் பற்றி இணையவழி ஊடாக வாசித்து அறிந்து கொள்ள முடியும்.

– வைத்திய கலாநிதி  சத்தியமூர்த்தி , பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை

Related Posts