என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றயதினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டு சாட்சி பதிவுகள் இடம்பெற்றன. அதன் போதே எதிரி அவ்வாறு வாக்கு மூலம் அளித்தார்.
பல்லினால் கடிக்கப்பட்ட காயங்கள் தொடர்பாக ஆய்வு செய்த பல் வைத்திய நிபுணர் டாக்டர் ஜயனி. பீ. வீரட்ண தமது பல் வைத்திய அறிக்கையினை சமர்ப்பித்து சாட்சியமளிக்கையில் ,
பற்கடி தொடர்பில் ஆய்வு.
எனக்கு சிறுமியின் உடலில் இருந்த கடி காய பகுதியை வெட்டி அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தருமாறு கோரப்பட்டு இருந்தது.
அத்துடன் கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரை அழைத்து வந்து அவரது பற்கட்டு வரிசையினை பரிசோதித்து , கடிகாயத்தில் உள்ள பற்கட்டு வரிசையும் , ஜெகதீஸ்வரனின் பற்கட்டு வரிசையும் ஒன்றா என்பது தொடர்பில் ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டது.
ஒரு மனிதனின் பற்கட்டு வரிசையும் இன்னோர் மனிதனின் பற்கட்டு வரிசையும் ஒரு போதும் ஒன்றாக இருக்காது. அது இரட்டை குழந்தையாக இருந்தாலும் , அந்த வகையில் நான் ஆய்வுகளை மேற்கொண்டேன். என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அமெரிக்க தரத்திலான சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது.
பற்கட்டு வரிசை மிக துல்லியமாக பொருந்துகின்றது.
அந்த வகையில் என்னால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிறுமியின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பற்கடி காயத்தில் உள்ள பற்கட்டு வரிசையும் ,ஜெகதீஸ்வரனின் பற்கட்டு வரிசையும் மிக துல்லியமாக பொருந்துகின்றது. என தனது ஆய்வுகளின் அடிப்படையில் கண்டு கொண்டமைக்கு அமைவாக அறிக்கை சமர்பித்து உள்ளேன் என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து அவரின் சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, மரபணு பரிசோதனையை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தின் விஞ்ஞானி எஸ்.டி.எஸ்.குணவர்த்தன மரபணு அறிக்கையை சமர்ப்பித்து சாட் சியமளிக்கையில் ,
மரபணு பரிசோதனைக்காக 16 தடய பொருட்கள் கையளிக்கப்பட்டன.
மரபணுக்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் வேறுபடும். ஆனால் இரட்டையர்களுக்கு அது விதிவிலக்காக ஒத்துப்போகலாம். மரபணு பரிசோதனைக்கு என 2012.03.19ஆம் திகதி 16 தடய பொருட்கள் பொதி செய்யப்பட்ட நிலையில் என்னிடம் கையளிக்கப்பட்டது.
அதில் சிறுமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் , இரத்த கறையுடன் கூடிய நீல நிற சொப்பின் பை , இரத்த கறையுடன் கூடிய கறுப்பு நிற பெண்கள் அணியும் நீள காற்சட்டை (பியாம) , பெண் பிறப்புறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட திரவம் , இரண்டு தலைமுடி , இரத்த கறையுடன் கூடிய நீல நிற சாரம் , சிறுமியின் இரத்த மாதிரி , ஜெகதீஸ்வரன் என்பவரது இரத்த மாதிரி , உள்ளிட்டவை என்னிடம் மரபணு பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.
பரிசோதனை முடிவு.
அவற்றை பரிசோதனை செய்யத போது , நீல நிற சொப்பின் பை , பெண்கள் அணியும் நீள காற்சட்டை (பியமா) மற்றும் நீல நிற சாரம் ஆகியவற்றில் காணப்பட்ட இரத்த மாதிரிகளும் சிறுமியின் இரத்த மாதிரிகளும் பொருந்தின. அதேபோன்று சிறுமியின் உடலில் இருந்து மீட்கப்பட்ட தலைமுடி சிறுமியினுடையது. பிறப்புறுப்பில் இருந்து மீட்கப்பட்ட திரவம் , ஒரு ஆணின் விந்து திரவம் .என பரிசோதனையில் முடிவுக்கு வந்தேன்.
விந்தில் உள்ள மரபணுக்களை பரிசோதனை செய்து அது யாருடைய மரபணுவுடன் ஒத்து போகுது என்பதனை கண்டறிய முடியவில்லை அதற்கு காரணம் . குறித்த விந்து திரவத்துடன் பெண்ணின் மரபணுக்களும் கலந்து இருந்தமையால் ,அதனை மிக துல்லியமாக பிரித்து பரிசோதனை செய்ய முடியவில்லை என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன.
அதையடுத்து வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுவதாக மன்றில் தெரிவித்தார்.
அதனை அடுத்து நீதிபதி எதிரியிடம் , மன்றில் தனது வாக்கு மூலத்தை சாட்சி கூண்டில் நின்று வழங்கலாம். அதன் போது சத்தியம் செய்ய வேண்டும் குறுக்கு விசாரணை இடம்பெறும். அல்லது எதிரி கூண்டில் நின்று வழங்கலாம். அதன் போது சத்தியம் செய்ய தேவையில்லை. குறுக்கு விசாரணையும் இடம்பெறாது. அல்லது எதிரி மௌனமாக இருக்க விரும்பின் இருக்கலாம் என கூறினார்.
எதிரி சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளிப்பு.
அதற்கு எதிரி தான் சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளிக்க போவதாக தெரிவித்து, மன்றில் வாக்கு மூலம் அளித்தார். அதன் போது குறிப்பிடுகையில் ,
நான் சம்பவ தினமான அன்றைய தினம் மச்சாளின் கணவனின் இறைச்சிக்கடைக்கு காலை 6 மணியளவில் சென்று இருந்தேன். இறைச்சி வர தாமதமாகும் என அவர் கூறி இருந்தார். நானும் அதர்க்கா கடையில் காத்திருந்தேன். காலை 8 மணியளவில் இறைச்சி வந்தது. அதனை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன். அவ்வேளை என் பின்னால் உயிரிழந்த சிறுமி வந்ததை கண்டேன். நான் வீட்டே சென்று விட்டேன். அதன் பின்னர் அந்த சிறுமி எங்கே சென்றார் என தெரியாது.
பின்னர் நான் வீட்டிற்கு குடிநீர் எடுத்துவர சென்று அதனை எடுத்து வந்து வீட்டில் வைத்து விட்டு காலை 10 மணியளவில் பஜாருக்கு சென்று விட்டேன்.
மாலை நான் வீட்டில் இருந்த போது என்னுடைய மனைவி , ” பிள்ளையார் கோவிலடியில் சனமா இருக்கு ” என சொன்னா நான் அதனை என்ன என்று பார்க்க சென்றேன்.
எங்கே பொலிஸ் , கிராமசேவையாளர் நின்றனர். அவர்களுடன் 50க்கு மேற்பட்ட ஊரவர்கள் கூறி நின்றனர். அங்கே சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று விட்டு , வீட்டுக்கு வந்து விட்டேன்.
பின்னர் வீட்டில் , இரவு நானும் மச்சாளின் கணவனான சகலனும் மது அருந்தினோம். அது முடிய அவர் தனது வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற சில நிமிடங்களில் அவரை ஊரவர்கள் பிடித்து என் வீட்டுக்கு இழுந்து வந்து என்னை பிடித்து அடித்தனர். “நீ தான் அந்த பிள்ளையை கொலை செய்த நீ” என சொல்லி அடித்து வீட்டில் இருந்து வீதி வழியாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தை நோக்கி அடித்து இழுத்து சென்றனர்.
அந்த வேளை அங்கே வந்த நெடுந்தீவு பொலிசார் என்னை தம்மிடம் ஒப்படைக்க கோரினார்கள். அதற்கு ஊரவர்கள் முடியாது. “இவன் தான் கொலை காரன் இவனை நாங்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.” என கூறினார்கள்.
அவ்வேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த டோம் என்பவர் அங்கே வந்து இவனை பொலிசிடம் ஒப்படையுங்கள். நீங்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கூறி என்னை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சித்திரவதை செய்தனர்.
போலீசார் என்னை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று, “நீ தான் அந்த பிள்ளையை கொலை செய்தனீ ” என கூறி என்னை சித்திரவதை செய்தனர்.
சராம் , ரி சேர்ட் என்பவற்றை சடலத்தின் மீது போட்டனர்.
நான் அணிந்திருந்த நீல நிற சாரம் , மற்றும் ரி சேர்ட் என்பவற்றை கழட்ட சொல்லி கூறி எனக்கு வேறு உடைகள் தந்தனர். அதன் பின்னர் இரவு 1 மணியளவில் என்னை சடலம் கிடந்த இடத்திற்கு பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது உனக்கு உடம்பு அலுப்பாக இருக்கும் இந்த இத குடி என சாராயம் தந்தார்கள். நான் அதை வாங்கி குடிக்கவில்லை .என்னை சடலம் கிடந்த இடத்திற்கு அழைத்து சென்று சடலத்தை பார்க்க கூறிய பின்னர். என்னை வாகனத்தில் ஏற்றி இருத்தி விட்டு நான் பொலிசாரிடம் கழட்டி கொடுத்திருந்த சாரம் , ரி சேர்ட் என்பவற்றை போலீசார் சடலத்தின் மீது போட்டு எடுத்து வந்ததை நான் என் இரண்டு கண்ணாலும் கண்டேன்.
அதன் பின்னர் என்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். காலை பொலிஸ் நிலையத்தை பெருமளவான ஊரவர்கள் சூழ்ந்து நின்று என்னை தம்மிடம் ஒப்படைக்குமாறு போராட்டம் செய்தனர். அதனால் பதட்டமாக இருந்தது. மாலை 3 மணிக்கு பின்னரே , கடற்படையினரின் பாதுகாப்பில் அவர்களின் விசேட படகில் , என்னை பாதுகாப்பாக குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்தே எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
அதன் போது வாக்கு மூலத்தை சிங்கள மொழியில் பதிவு செய்தனர். என் மனசாட்சிக்கு தெரிந்து , நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என தனது வாக்கு மூலத்தை சாட்சி கூண்டில் நின்று மன்றில் அளித்தார். அதனை தொடர்ந்து வழக்கினை நாளைய தினத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவுகாவல்துறையினரால் சந்தேகத்தில் கைது செய்யபப்ட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.