மீன்பிடி சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமான அமைபவர்கள் மத்திய அரசாங்கமே அவர்களே அவற்றைத்தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான இழுவைப்படகினை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி உணவு விடுப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதையும், அவற்றுக்குத்தீர்வுகாணுமாறும் வலியுறுத்தி 160 க்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எமது தாயகப்பிரதேசத்திலுள்ள ஆழ்கடற்பிரதேசங்களில் கடற்படையினரின் உதவியுடன் தென்னிலங்கை மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு எமது கடல்வளங்கள் சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றது.
இந்தநேரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப்பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது மீனவர்கள் சிலர் இப்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சட்டத்தை அறிந்தவர்களுடன் உரையாடுகின்ற போது , றோலர் மீன்பிடி முறையிலும் இயந்திரங்களைப்பாவிக்காமல் கைகளால் வலையை இழுத்து தமது தொழிலை மேற்கொள்ளும் போது அது சட்ட விரோதமானதல்ல எனத்தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி முறையைப்பின்பற்றுபவர்களுக்கு சட்டத்தின் உதவியுடன் அவர்களுக்குரிய நீதி விரைவாக கிடைக்கவேண்டும். அதுவரைக்கும் அவர்களுக்குரிய இடைக்கால நிவாரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
எனினும் இவற்றையெல்லாம் செய்ய வேண்டிய மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைச்செய்யாமல், அதிகாரங்கள் எதுவும் அற்ற எமது மாகாண சபையே மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதான பொய்த்தோற்றப்பாடு ஒன்றை ஏற்படுத்தி மக்களைக்குழப்பி வருகின்றது.
ஆனால் எமது மக்கள் மிகவும் தெளிவான முறையில் வெளிக்காட்டியுள்ள இந்த ஒற்றுமை உணர்வை மிகப்பெரிய அளவில் கட்டியெழுப்பி தங்கள் உரிமைக்காக, இவை தொடர்பான அதிகராங்களையுடைய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கக்கூடிய அளவிற்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.