மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலாவது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பின்போதே மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வுகள் மற்றும் அபிவிருத்தி முன்னேற்றங்களையும் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அமைச்சர் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பில் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வலிகாமம் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி அபகரிப்பு தொடர்பில் இந்திய வெளிவிவாகர அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கு யாழ் சிவில் சமூகத்தின் சார்பில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று மாலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டனர் இந்த சந்திப்பின் போதே குறித்த மகஜர் கைளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தெல்லிப்பழை பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை திறந்து வைத்ததுடன் பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஆவணத்தையும் கையளித்தார்.
இந்த விஜயங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகார் பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.