மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

Karunanidhiஇலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர். திமுகவிடம் 18 எம்பிக்கள் உள்ளனர். ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் திமுக கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்காவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்தார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதங்களில், இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க் குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். மேலும், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே.ஆண்டனி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று காலை 11 மணி வரை மத்திய அரசின் முடிவு குறித்து எந்த தகவலும் திமுகவுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று மூன்று மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இனியும் மத்திய அரசில் நீடிப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும். எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம்.

இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார். திமுக ஆதரவு வாபஸ் ஆனதையடுத்து மும்பை, டெல்லி பங்குச் சந்தைகள் சரிந்தன.

Related Posts