மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வன்னி அமைச்சரின் தலையீட்டால் வீட்டுத் திட்டத்தில் முறைகேடு

மத்திய அரசில் அங்கத்துவம் வகிக்கும் வன்னி அமைச்சரின் அதீத தலையீட்டினால் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

saththeyalingam

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசினாலும் வேறு சர்வதேச நிறுவனங்களினாலும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டது தாங்கள் அறிந்ததே.

எனினும், துரதிஷ்ட வசமாக கடந்த அரசில் அங்கம் வகித்த வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய அமைச்சரின் அதீத அரசியல் தலையீட்டின் நிமிர்த்தம் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் சென்றடையவில்லை.

மாறாக அமைச்சரினால் நியமிக்கப்பட்ட உள்ளுர் பிரதிநிதிகளின் தலையீட்டினால் பயனாளிகள் தெரிவு பக்கச்சார்பாக நடைபெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத்திட்டத்தில் கட்டம்-1 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கட்டம்-2, கட்டம்-3 என நடைபெற்றுவருகின்றது. ஏற்கனவே இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான வீடுகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறாது இருக்க எனது அமைச்சினால் பிரேரிக்கப்படுகின்ற பிரதிநிதிகளை வடக்கின் 5 மாவட்டங்களிலும் நடைபெறும் பயனாளிகள் தெரிவில் பார்வையாளர்களாக அல்லது கண்காணிப்பாளர்களாக செயற்படுவதற்கு ஆவன செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்வதோடு இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு அறுவுறுத்தல் வழங்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றுள்ளது.

இந்தக் கடிதத்துடன் இதுவரை வழங்கப்பட்ட வீடுகள் தொடர்பான விவரங்களும் வடமாகாணத்தை பிரநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு மாவட்டத்துக்கான பிரதிநிதிகள் விவரமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Related Posts