மத்தியூஸிடம் 5 மணி நேரம் விசாரணை!

ஆட்டநிர்ணய சதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரங்கன ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரிடம் ஆட்டநிர்ணய தரகர்கள் நெருங்கியமை தொடர்பிலேயே தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக மத்தியூஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. இதன்போது ரங்கன ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரிடம் ஆட்ட நிர்ணய தரகர் ஒருவர் அணியின் முக்கியஸ்தர் ஒருவர் மூலமாக நெருங்கியுள்ளார்.

எனினும், இது தொடர்பில் குசல் மற்றும் ரங்கன ஹேரத் இருவருடம் உடனடியாக அணியின் முகாமையாளருக்கு அறிவித்திருந்ததுடன் கிரிக்கெட் சபையிலும் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளின்போது, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்கவின் அனுசரணையிலேயே குறித்த ஆட்டநிர்ணய தரகர் ரங்கன ஹேரத் மற்றும் குசல் இருவரை நெருங்கிய தகவல் வெளியாகியிருந்தது.

அதனை அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊழல் மோசடிகள் விசாரணை மேற்கொள்ளும் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். அதனை அடுத்து ரங்கன,குசல் இருவரிடமும் அது வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், ஆட்டநிர்ணய தரகர் இலங்கை அணித்தலைவர் லசித் மலிங்க, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மத்தியூஸ் உள்ளிட்ட மேலும் சிலருடன் இருக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஞ்சலோ மத்தியூஸுக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை பிறப்பித்திருந்தது.

நேற்று தனது சட்டத்தரணி ஊடாக ஆஜரான மத்தியூஸிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மத்தியூஸ்,

“ஆட்டநிர்ணயத்தில் வீரர்களை ஈடுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி வீரர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும், கிரிக்கெட்டின் உன்னத தன்மையை பாதுகாப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் சபை மற்றும் பொலிஸார் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நான் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குகின்றேன். இது வீரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை அல்ல. வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையாகும். எனக்குத் தெரிந்தவற்றை அணியின் தலைவர் என்ற ரீதியில் பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்குக் கூறியுள்ளேன்” – என்று கூறியுள்ளார்.

Related Posts