மத்தியில் நந்தி இருக்கின்றது – வடமாகாண முதலமைச்சர்

vickneswaranபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சினையாக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று சனிக்கிழமை (05) தெரிவித்தார்.

கூட்டுறவு ஆய்வு மகாநாடு (2014) யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக் காலங்களில் புலிகள் சார்பான நிறுவனங்கள் வடமாகாண மக்களுக்குப் பணம் கொடுப்தை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், பணம் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களம் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ஜனாதிபதியினை நான் அவரின் பல செயலாளர்களுடன் கொழும்பில் சந்தித்த போது வெளிநாட்டில் இருக்கும் எமது தமிழ் மக்கள் எமக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதாவது 1000 இலட்சம் ரூபாய்க்குக் குறைவான தொகைகளை அனுப்பும் போது அவற்றை நேரடியாகப் பெற உதவி செய்ய வேண்டும் என்று கோரினேன். அதற்கு அவர் டொக்டர் பி.பி.ஜயசுந்தர அவர்களின் ஆராய்வுக்குப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

அதாவது பணம் எங்கிருந்து வருகின்றது என்பதைத் தாம் ஆராய வேண்டும் என்றார். இதன் தாற்பரியம் என்ன? புலிகள் பணம் கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பணம் எவ்வாறு இங்கு பாவிக்கப்படப் போகின்றது என்பதுதானே அரசாங்கத்தின் கரிசனையாக இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அப்பணம் புலிப்பணமா அல்லது சிங்களப்பணமா, கரடிப்பணமா இல்லையா என்று ஆராய முற்படுவது எனக்கு மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பணம் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டால் அல்லது பிழையான முறையில் சம்பாதித்துப் பெற்று வெளிநாட்டில் பெற்றுக்கொண்ட பணம் என்றால் அதை ஆராய வேண்டும் என்று கூறலாம். அதாவது பணச் சலவை சம்பந்தமாகப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறு ஆராய்வதென்றால் அத்தனை நன்கொடைப் பணங்களையும் பற்றி ஆராய்வு செய்ய வேண்டும்.

அதைவிட்டுப் புலிப்பணம் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியமை மனமயக்கத்தையே ஏற்படுத்துகின்றது.

வடமாகாணம் ஒரு காலத்தில் கூட்டுறவுக்குப் பெயர் போன ஒரு பிராந்தியமாக அமைந்திருந்தது. அப்பொழுது அரசாங்கங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அநாவசியமாக உள்ளிடாது மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே உரியவாறு நடாத்திச் செல்ல தாங்கள் உதவி புரிய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார்கள். அண்மைக் காலங்களில் மத்தியின் கட்டுப்பாடு அதன் சகல விதமானதான உள்ளீடுகள் என்பன கூட்டுறவு இயக்கத்தின் சுதந்திரத்தையும் தொழிற் திறனையும் பாதித்துள்ளன. அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts