மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.

“தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார்” என்று மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து மறுநாள் வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் முன்னிலையாகததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூத்த சட்டத்தரணி ஊடாக அந்தப் பெண் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

அவருடன் எரிகாயங்களுக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்பட்ட பெண்ணும் மன்றில் இருந்தார். அவரைக் காண்பித்தே மூத்த சட்டத்தரணி மன்றில் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்தார்.

மன்று – எத்தனை வயது?

பெண் – 21 வயது

மன்று – என்ன வேலை செய்கிறீர்கள்

பெண் – இசைக் குழுக்களில் பாட்டுப் பாடுகின்றனான்.

குற்றப்பத்திரத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், 7 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த உத்தரவிட்டார். அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடங்களுக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.

Related Posts