புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளம் குடும்பத்தலைவர் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் ஊறனி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் மோகன் (வயது-28) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார் .
மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என உறவினர்கள் கூறினர்.
சடலம் தற்போது அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.