மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் ஒருவருக்கு 200 மணித்தியாலயங்கள் சமூக சேவை செய்யுமாறு தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் 45 வயதுடைய அந்தணர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் தினமும் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவதுடன், தாயாரைத் தாக்குவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் அந்தணர் இன்று முற்படுத்தப்பட்டார்.
மன்று : என்ன செய்யீர்கள்?
குற்றஞ்சாட்டப்பட்டவர்: ஆலயத்தில் பூஜை செய்கின்றேன்.
மன்று: பூஜை செய்பவர் மது அருந்தக் கூடாதே?
குற்றஞ்சாட்டப்பட்டவர்: பூஜை செய்யும் போது, குடிப்பதில்லை. பூஜை முடிந்த்தும் குடிப்பேன்.
மன்று: குடிப்பவர் பூஜை செய்யக்கூடாது, பூஜை செய்யக்கூடாதே?
குற்றஞ்சாட்டப்பட்டவர்: மௌனம்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் தந்தையார் மன்றில் தோன்றினார்.
“வீட்டிலிருந்து காலையில் ஒழுங்ககாகச் செல்வார். மாலையில் வீடு திரும்பும் போது, மதுபோதையில் வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவார்” என்று அந்தணரின் தந்தையார் மன்றில் தெரிவித்தார்.
அந்தணம் முன்னர் ஒரு தடவையும் மன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பதை நீதிவான் சி.சதீஸ்தரன் கவனத்தில் எடுத்தார்.
அதனால் அந்தணர் 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்தவேண்டும் என சமூதாயம்சார் சீர்திருத்தல் திணைக்களத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.