அண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
அஹலவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவிப்பு நாளை ( இன்று திங்கட்கிழமை) தொடக்கம் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், பெண்கள் மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும், இரவு 10 மணிவரையிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கப்படவும் அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.