மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்

நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், “1985 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கடமையாற்றியிருக்கிறேன் நான் கடைசியாக 2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கீரிமலை உடுவில் பகுதிகளில் கடமையாற்றியிருந்தேன்.

அக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியிருந்தேன். அத்தோடு விவசாய மக்களுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்திய பாதீன ஒழிப்பில் நான் முக்கிய பங்காற்ற யிருந்தேன்.

அதன் பின்னர் வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப் பட்டு பின்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாகிறது. எனினும் யாழ் மாவட்டம் தொடர்பாக ஏற்கனவே நான் அறிந்தவன் இங்குள்ள மக்களை நன்கு அறிந்தவன்.

எனவே இங்குள்ள மதத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்தின் ஊடாக ஒற்றுமையினை நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மாவட்டத்தில் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவேன்.

மேலும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன்.

அத்தோடு எனது கீழ் பணியாற்றும் சகல ராணுவ வீரர்களும் பொதுமக்களின் சகல சமூக செயற்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

Related Posts