எழுக தமிழ் பேரணி குறித்து பேராசிரியர் ஓவியர் புகழேந்தி. கருத்து
எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகழே வணக்கம்.
இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து இதை எழுதுகின்றேன்.
இலங்கையில் தமிழினம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை துயரங்களை இழப்புகளை சந்தித்து வருகின்றது. பல்வேறு போராட்டங் களுக்குப் பிறகும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதோடு இருந்ததையும் இழந்தோம் எஞ்சி இருப்பதையும் தவணைமுறையில் இழந்துகொண்டிருக்கிறோம். இலட்சக்கணக்கான மக்களை இழந்தோம், ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்தோம், கணக்கிட முடியாத சொத்துகளை உடைமைகளை இழந்தோம், உயிராக நேசித்த மண்ணையும் இழந்தோம்.
தமிழர்களிடம் இன்னும் எஞ்சி இருக்கின்ற அனைத்தையும் பறிப்பதற்கு, கேட்பதற்கு யாரும் இல்லை என்ற துணிவில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் திட்டமிட்டு செயல்படுகின்றது. திட்டமிட்ட இன அழிப்பைச் செய்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் தமிழ் மண்ணை பறிக்கின்ற வேலைகளையும் திட்டமிட்டுச் செய்கிறது. தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிறுவுவதும், அதன் மூலம் தமிழ் மண்ணைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களை செய்து தமிழின அடையாளத்தை அழித்து சிங்களமயப் படுத்துகின்ற வேலையைத் தொடர்ந்து செய்கின்றது.
உலகின் தொன்மையான ஒரு இனம்,எஞ்சி இருக்கின்ற மண்ணையும் இழந்துவிட்டு எந்த உரிமையையும் கேட்க முடியாது. அதனால் மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை.
அந்தக் கடமையை நிறைவேற்றும் விதமாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் நடவடிக்கையை அம்பலப்படுத்தி, உரிமையை நிலைநாட்ட உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்பம்பர் 24,2016 அன்று யாழ் நகரில் தமிழ் மக்கள் பேரவை முன்னேடுக்கும் மாபெரும் பேரணியில் தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு ஒருமித்து ஒன்றுபட்டு பங்கேற்குமாறு வேண்டுகிறேன்.