தொடரை வென்றது நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது.

New Zealand v Sri Lanka: Game 5

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து சார்பில் மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 102 ஓட்டங்களை வாறிக் குவித்தார்.

மேலும் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் ரெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 294 ஓட்டங்களை விளாசியது.

இதனையடுத்து 295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 47.1 ஓவர்களிலேயே 258 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை சார்பில் மெத்தியூஸ் அதிகபட்சமாக 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.அத்துடன் தினேஸ் சந்திமால் 50 ஓட்டங்களை விளாசினார்.ஏனைய வீரர்கள் எவரும் அரைச்சதத்தைக் கூட பதிவு செய்யாது சொற்ப ஓட்டங்களுடன் வௌியேறினர்.

இதேவேளை நியூசிலாந்து சார்ப்பில் சிறப்பாக பந்து வீசிய, மாட் ஹென்றி (Matt Henry) ஐந்து விக்கெட்டுக்களையும் டிரென்ட் போல்ட் (Trent Boult ) மூன்று விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது.

இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி (4வது போட்டி) கைவிடப்பட்ட நிலையில், மூன்று போட்டிகளில் நியூசிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்படி 3-1 என நியூஸிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Related Posts