மண்ணுக்காகப் போராடிய நாங்களே அந்த மண்ணைக் கொலை செய்து வருகிறோம் : பொ.ஐங்கரநேசன்

மூன்று தசாப்த காலப்போர் மண்ணுக்காகவே நடைபெற்றது. ‘இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காகவே நாம் போராடினோம். ஆனால், மண்ணுக்காகப் போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான விவசாய இரசாயனங்களால் கொலை செய்து வருகிறோம் என்று வடக்கு விவசாய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக மண்தினத்தை முன்னிட்டு ‘மண்ணும் அவரையங்களும் – உயிர் வாழ்வதற்கான ஒரு கூட்டு’ என்ற கருப்பொருளில் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை (19.12.2016) கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இக்கருத்தமர்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மண்ணைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. வீடுகளில் நுழையும்போது வாசற்கதவருகில் காற்பாதங்களில் உள்ள மண்ணைத் தட்டிவிட்டுச் செல்வதுதான் மண் பற்றிய பெரும்பாலானோரது கவனமாக உள்ளது. காலடியில் உள்ள அந்த மண் நாளுக்கு நாள் வளம் இழந்து போவது பற்றி நாம் அக்கறைப்படுவதில்லை.

மண்ணுக்கு உயிர் உள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமையில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் மண்ணுக்குள்ளேதான் வாழுகின்றன. ஒரு தேக்கரண்டி வளமான மண்ணில் மில்லியன் கணக்கான பக்ரீறியாக்களும் பல மீற்றர்கள் அளவுக்குப் பூஞ்சணை இழைகளும் காணப்படுகின்றன. மண்ணின் வளத்துக்கு, கனியுப்புக்களின் சுழற்சிக்கு இவை அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமான விவசாய இராசயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் மண் உயிரினங்களைச் சாகடித்து வருகிறோம்.

பக்ரீறியாக்களும் பங்கசுக்களும் இல்லாத மண்ணில் எவ்வளவுதான் இரசாயன உரங்களைப் போட்டாலும் பயிர்கள் செழிப்பாக வளராது. உரங்களைப் போடப் போட மண் மேலும் மேலும் தரமிழந்து கடைசியில் தரிசு நிலமாகவே மாறும். இதனால்தான், எங்களது விவசாய முறையில் மண்ணுக்குள் பக்ரீறியாக்களைச் சேர்க்கும் வகையில் சுழற்சிப் பயிராக நாம் சணல், பயறு, உழுந்து போன்றவற்றைப் பயிரிட்டு வந்திருக்கிறோம். இவற்றின் வேர்ச்சிறு கணுக்களில் வாழுகின்ற இறைசோபியம் பக்ரீறியாக்கள் வளியில் உள்ள நைதரசனைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தி வந்துள்ளன.

எமது விவசாயிகளில் பெரும்பாலானோர் இப்போது ஒரு போகத்துடன் பயிர்ச்செய்கையை மட்டுப்படுத்தி விடுகிறார்கள். அவரை இனத்தாவரங்களை இடைப்பட்ட போகங்களில் சுழற்சியாகப் பயிரிடும் முறைமைக்கு விவசாயிகள் மீளவும் திரும்ப வேண்டும். உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கு மாத்திரம் அல்லÉ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும் மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பூமி வெப்பம் அடைவதற்குக் காபனீரொக்சைட்டு வாயுவின் அளவு வளியில் அதிகரித்து வருவதே பிரதான காரணம். காபனீரொக்சைட்டு வாயுவைத் தன்னில் கரைத்து, வளியில் அதன் சமநிலையைப் பேணுவதில் முதலாவது இடத்தில் சமுத்திரங்கள் உள்ளன. இரண்டாவது மிகப் பெரும் காபன் தொட்டியாக மண்ணே உள்ளது. அந்த வகையிலும் மண்ணின் வளத்தை நாம் பாதுகாக்க வேண்டியவர்களாகவே உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இக்கருத்தமர்வில் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், யாழ் பல்கலைக்கழக பயிரியல்துறையின் தலைவர் கலாநிதி சிவமதி சிவச்சந்திரன், புவியியற்துறையின் முன்னாள் தலைவர் எஸ்.ரி.பி. இராஜேஸ்வரன், உலக உணவு நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் க.பத்மநாதன், மத்திய விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.எம்.ஏ.கேந்திரகம, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.நியாமுடின், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ரீ.கருணைநாதன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் அஞ்சனாதேவி சிறீரங்கன், பூ.உகநாதன், அ.செல்வராஜா ஆகியோரும் அதிக எண்ணிகையிலான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts