தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார்.
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை ஏற்க மறுத்ததுடன், குறித்த பிள்ளையை பாடசாலையில் அனுமதிக்கவும் மறுத்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த முதலமைச்சர் சாமர சம்பத், தமது அதிகாரிகளை அனுப்பி அதிபரை தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அழைத்து வந்து, தன் முன் மண்டியிடச் செய்தார்.
இச்செய்தி ஊடகத்தில் வெளியானது. அது குறித்த குரல் பதிவு ஒன்றையும் அதிபர் அளித்திருந்தார்.
எனினும் தேர்தல் இலாபங்களுக்காக தாம் மிரட்டப்பட்டே தமது குரல் பதிவு செய்யப்பட்டது என்று அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றயதினம் (19) குறித்த பாடசாலைக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட கல்வி வலய அதிகாரிகள் பலர் முன்னிலையில், தாம் மிரட்டப்பட்டதும் மண்டியிடச் செய்யப்பட்டதும் உண்மையே என அதிபர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
“என்னைத் தனது அலுவலகத்துக்கு வரவழைத்த மாகாண கல்விச் செயலாளர், முதலமைச்சர் குறித்த குரல் பதிவை வழங்கியதற்காக என்னைக் கடிந்துகொண்டார். என்னை மிரட்டியே அந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். அவரது மிரட்டலுக்குப் பணிந்தே நான் அவ்வாறு செய்திருந்தேன்.
“உண்மையில், என்னைத் தமது இல்லத்துக்கு வரவழைத்த முதலமைச்சர் என்னைக் கண்டபடி திட்டினார். என்ன, ஏது என்று கேட்பதற்குள் கடுமையாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கடைசியில் என்னை மண்டியிடச் செய்த பின்னரே அவரது கோபம் அடங்கியது” என, குறித்த அதிபர் தெரிவித்துள்ளார்.