இலங்கையில் பதுளை மாவட்டத்தில் புதையுண்டுள்ள கொஸ்லாந்தை- மீரியாபெத்த தோட்டக் குடியிருப்பு பகுதி மண்சரிவு அபாயம் உள்ள பகுதி என்று அந்தத் தோட்டத்தின் கம்பனிக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கூறுகின்றார்.
இருந்தாலும் அந்த தோட்ட மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளுக்கான காணிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் ரொஷான் ராஜதுரை கூறினார்.
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு பாதுகாப்பான மாற்றுக் குடியிருப்புகள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும், தோட்டக்கம்பனி அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திருக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் இருந்துவருகின்றன.
மலையகத்தில் தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கான காணிகளை வழங்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டை பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவும் முன்வைத்திருந்தார்.
‘எத்தனை பேர் மண்ணில் புதையுண்டார்கள் என்று எவருக்கும் சரியாகத் தெரியாது’
காணிகள் வழங்க மறுக்கும் தோட்டங்களிடமிருந்து காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தோட்ட நிர்வாகத்தின் மீதும், தோட்டக் கம்பனியின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் விமர்சனங்கள் பற்றியும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகளின் சங்கத்தின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பபட்டது.
‘எங்களுக்கு சொல்லப்பட்டதன்படி, அந்த மக்களுக்கு மாற்றுக் காணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. மக்கள் தானாக வெளியேறாவிட்டால், பலவந்தமாக எங்களால் வெளியேற்றி மீளக்குடியேற்ற முடியாது’ என்றார் ரொஷான் ராஜதுரை.
‘தோட்டத்திற்கு உரிமையான கம்பனிக்கு மண்சரிவு அபாயம் இருப்பது பற்றி மக்கள் அறிவித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அந்தக் கம்பனிக்கு அந்த தோட்டப்பகுதி மண்சரிவு அபாயம் உள்ள பகுதி என்று உண்மையில் அறிவிக்கப்பட்டிருக்க வில்லை. கம்பனிக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். கம்பனி அதிகாரிகளின் கருத்துப்படி, அவர்களுக்கு அதிகாரபூர்வமான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றார் ராஜதுரை.