முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் மக்கள் மீள்குடியேறியபோது மக்களுடைய காணிகள் பறிபோயிருந்தன.
அப்போது கொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து இல்மனைட் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள். அப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக 01ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.
இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக்கவில்லை. இடத்தை மட்டுமே தான் கொடுத்துள்ளதாக கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் மேற்படி கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனியமணல் அகழப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இலகுவாக கடல்நீரானது உட்புகும் ஆபத்து உள்ளது.
சாதாரணமாகவே கடல் பெருக்கெடுக்கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது வழமை. இவ்வாறான நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே இந்த வள கொள்ளை தொடர்பாக வட.மாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.