மணலாறு பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம்: கஜேந்திரகுமார்

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, நேற்று (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தான் தமிழ் இன அழிப்பினை செய்தார். அவருடைய ஆட்சியினை வீழ்த்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும்.

ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாற்றியதன் பின்னர், இன்று இந்த நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும் இன அழிப்பின் முக்கியமான அங்கம் நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.

அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இன அழிப்பிற்கு பின்னால் இருக்ககூடிய தத்துவத்தை அந்த கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும். சிங்களவர்களை பொறுத்தமட்டில் இந்த இலங்கை தீவு சிங்கள பௌத்த நாடு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கின்றார்கள்.

இன்று வடகிழக்கில் தமிழர் ஒரு தேசமாக வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள். இது ஆட்சி சம்மந்தப்பட்ட விடயம் அல்ல அவர்கள் இனம் சார்ந்த அடிப்படைக் கொள்கை. எந்த நபர் மாறினாலும் அந்த கொள்கை ஒன்றுதான்.

தமிழ் தேசத்தினை பொறுத்தமட்டில் நாங்கள் போராடினால் எங்கள் உரிமைகளை பெறலாம். இதோ 16 இல் தீர்வு, 17 இல் தீர்வு, 18இல் தீர்வு என்றும் இப்போது 19 இல் தீர்வு வரும் என்று கூறி தமிழர்களை ஏமாற்றக்கூடாது நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம“ என தெரிவித்துள்ளார்.

Related Posts