மட்டக்களப்பில் மீண்டும் பிக்குகள் அட்டகாசம்

மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது, அப்பகுதியில் அத்துமீறி விஹாரை அமைத்திருக்கும் பௌத்த தேரர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த இரு பிக்குகளும் இப்பிரதேசத்தில் இனிமேல் மாடு மேய்க்கக்கூடாதெனக் கூறி தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கவே இவ்வாறு தாக்குதலுக்குட்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இன்று புதன்கிழமை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும் குறித்த பகுதியில் அத்துமீறி அமைக்கப்பட்ட விஹாரையொன்றும் அதனைச் சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் இன்னும் காணப்படுவதாக, அப்பகுதியில் தங்களது மாடுகளை மேய்க்கும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட பிறிதொரு காணியை கையகப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அண்மை காலமாக செயற்பட்ட விதம், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts