ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் பிரிவில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவத்தில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரும், யாழ்.ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபருமே இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை சாவகச்சேரிப் பகுதயில் ஆட்டுத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் கடந்த 19 ம் திகதி இடம் பெற்றுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரிப் பகுதியில் தரவையில் மேயவிடப்பட்டு இருந்த சுமார் எண்ணாயிரம் ரூபா பெறுமதியான ஆட்டை திருட்டுத்தனமாக பிடித்து கடத்திக் கொண்டு சென்ற வேளையில் சந்தேகம் கொண்ட பொது மக்கள் விசாரித்ததைத் தொடர்நது சந்தேக நபர் பொது மக்களினால் பிடிக்கப்பட்டார்.
மன்னார் உப்புக்குளத்தை சோந்த சந்தேக நபர் சாவகச்சேரிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை திருட்டு ஆட்டை இறைச்சிக்காக வெட்டி பங்கு போட்ட வேறு ஒருவர் சாவகச்சேரிப் பொலிசாரினால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உடனடியாக செயலில் இறங்கிய பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று இறைச்சி பங்கு போட்வரை கைது செய்ததுடன் இறைச்சியையும் மீட்டுள்ளார்கள்.
வியாழக்கிழமை இடம் பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நேற்று பிற்பகல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.