மங்கையர் குலத்தின் மணிவிளக்கு தமிழினி – வைகோ இரங்கல்

இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.

சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத்தமிழ்மகள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்தார்.

தமிழ் ஈழத்தின் தொன்மை வரலாறு, சிங்களரின் கொடிய அடக்குமுறை, அனைத்துலக நாடுகளின் அணுகுமுறை அனைத்தையும் தேர்ந்து தெளிந்திருந்த இந்த வீராங்கணை இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 2013 வரை சிறப்புத் தடுப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

தடுப்பு முகாமில் சொல்ல இயலாத சித்ரவதைகளுக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகிற அந்த வீர தமிழ் நங்கைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பொதுவாக வெளியிடுவதில்லை.

நெடுதுயர்ந்த கம்பீரமான தோற்றமும், இனிய பண்புகளும் நிறைந்த வீராங்கனை தமிழினியின் நல்லடக்கம் நாளை நடைபெறுவதாக அறிகிறேன். வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Posts