ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஊரடங்கு தளர்த்தப்பம் பிரதேசங்கள், மற்றும் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படல் வேண்டும்.
மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளுதலோ, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் திறக்கப்படும் நிறுவணங்கள், திணைக்களங்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
மக்கள் கூட்டத்தை குறைக்கும் விதமாகத்தான் அடையாள அட்டை முறைமை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மக்கள் கூடவோ, களியாட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள், மதவழிபாடுகளில் ஈடுபடவோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறும் நபர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூடப்பட்டுள்ள பிரதேசங்கங்களுக்கு வருவதோ அல்லது வெளியேறுவதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை. அத்தோடு, இந்த காலங்களில் தேவையில்லாத மதவாதங்களை தூண்டும் செயற்பாடுகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களின் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடும் நபர்களை நாம் கைது செய்தால், அவர்களுக்கு நீதிமன்றின் ஊடாக 7 வருட சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுப்போம் என்பதையும் இவ்வேளையில் தெரிவிக்த்துக் கொள்கிறேன்.
மே 4 ஆம் திகதிவரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலவரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என கூறினார்.