மக்கள் நலன்சார்ந்ததே எமது அரசியல் நிலைப்பாடாகுமெனவும் அதனடிப்படையிலேயே நாம் செயற்திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி சக்கோட்டையில் நேற்றய தினம் (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் தொடர்ச்சியாக மக்கள் நலன்சார்ந்த எமது செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசியல் பலம் என்பது அவசியமானது.
அந்தவகையில், மக்கள் எந்தளவுக்கு எந்தளவு எமக்கு அரசியல் பலத்தை தருகின்றார்களோ அந்தளவுக்கு அந்தளவு எம்மால் மக்கள் பணிகளை முன்னெடுக்க முடியும்.
எமது மக்கள் தன்னிறைவுடன் சுயமாக வாழ வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
கடந்தகாலங்களில் அரசினதும் கட்சியினதும் நிதிகளைக் கொண்டு கடற்றொழில் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கியுள்ளோம்.
ஆனால், உங்களிடம் வாக்குகளை மட்டும் அபகரித்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்த எவ்விதமான அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக புதிய அரசை கொண்டு வந்தவர்கள் நாம் என மார்தட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய அரசு தம்மை ஏமாற்றி விட்டதாக கூறிவருகின்றமையானது மக்களை ஏமாற்றுகின்ற கபட நாடகம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கும் செயலாளர் நாயகம் பதிலளித்தார்.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளரும், வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் உடனிருந்தார்.