மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்கு முன்பு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அவர் கொடுத்திருந்தார்.

உண்மையிலேயே இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் இல்லை என்றே நான் நம்புகிறேன். சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும். அதுவும் நம்முடைய தலைவர் ரஜினிகாந்த் தான். நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். என்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். ராகவேந்திரா சுவாமியை நான் அவர் உருவத்தில் காண்கிறேன். நான் அவருக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். என்றுமே அவருடைய ரசிகனாகவே இருப்பேன்.

எனது பெயருக்கு முன்னால் நானே எனக்கு ஒரு அடைமொழி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இனிமேல், எனது நடிப்பில் வெளிவரும் படங்களில் எனது பெயர் ‘கண்மணி ராகவா லாரன்ஸ்’ என்றே திரையில் வரும். என்னுடைய தாயின் பெயரை என்னுடைய பெயருக்கு முன்னால் வைப்பதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. இதற்கு எந்த அடைமொழியும் நிகராகாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts