மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மயிலிட்டிப் பகுதியில் படையினரால் “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி விடுத்த வேண்டுகோளின் பேரில் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்படி “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளார்.
அனுராதபுரம், பனாங்கொட இராணுவ முகாம்களில் ஏற்கனவே “யோக்கட்’ உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. வடக்கில் முதன் முதலாக மயிலிட்டியில் இந்த உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த “யோக்கட்’ உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிவோர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தில் பணியாற்றி போரில் அங்கவீனமடைந்தவர்களே. மேலும் இதன் மூலம் கிடைக்கும் இலாபங்கள் போரில் அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் நலனோம்பு செலவுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.