மக்களை நினைவுகூர அனுமதி, புலிகளை அஞ்சலிக்கத் தடை

army-ruwan-vanikasooreyaமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை நடத்துவதற்கும், இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கும் இராணுவம் தடைவிதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளனவே என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பேச்சாளர் “அவ்வாறு நாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு எந்தத் தடையுமில்லை. மே 18 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் நினைவாக ஆலயங்களில் கிரியைகள் மேற்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கி கொல்லப்பட்டவர்களையோ நினைவு கூருவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டாது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படக்கூடாது என் பதற்காகவே, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றதே என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு எந்த விதத் தொடர்பும் இல்லை,”அந்தக் கூற்று முற்றிலும் தவறானது. அவ்வாறு நாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கல்வி விடயங்களில் நாம் தலையிடுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகம் உயர் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts